chennireporters.com

அரசு மருத்துவர்களின் கோரிக்கையை முதல்வர் விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

2019 அக்டோபர் 28 ல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அரசு மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நேரடியாக வந்து ஆதரவு தெரிவித்த, அப்போதைய எதிர்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான திரு. ஸ்டாலின். அடுத்து அமையும் நம் ஆட்சியில் அரசாணை 354 ன் படி ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

தமிழகத்தில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு நேர்மையாக நடைபெற்றதாக  சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்கள்.

இருப்பினும் முழுவதும் நேர்மையாக நடக்கவில்லை. அதனால் இந்த இடமாறுதல் கலந்தாய்வில், முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட 25 அரசு மருத்துவர்களை அமைச்சரின் முன்பு அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு கடந்த 22..6. 22 அன்று ஆஜர்படுத்திய போது, அமைச்சர் தனது சிறப்பு உதவியாளர் வரதராஜனை DME office க்கு அனுப்பி விசாரணை நடத்தியதில் 25 மருத்துவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட துறையில் அதற்கான சிறப்பு படிப்பு படித்துள்ள வல்லுனர்கள் இருப்பதுதான் நியாயம். அப்போது தான் அந்த சிறப்பு மருத்துவரின் சேவை மக்களுக்கு கிடைக்கும். மேலும் அந்த மருத்துவருக்கும் துறை அனுபவம் (Teaching experience) கிடைக்கும்.

ஆனால் சிறப்பு மருத்துவர்கள் இருந்தும், அவர்களை நியமிக்காமல் வேறு படிப்பு படித்த டாக்டர்களை நியமிக்கிறார்கள். இது இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளை அரசே மீறுவதாக உள்ளது. மேலும் இதனால் நோயாளிகள் அப்பட்டமாக பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நியாயமற்ற செயலை அமைச்சரிடம் எடுத்துச் சென்ற போது தவறுகள் நிச்சயமாகக் களையப்படும் எனவும் தகுதியுள்ள சிறப்பு மருத்துவர்களை உரிய இடத்தில் அமர்த்துவோம் எனவும், சட்டப் போராட்டக் குழுவிடம் உறுதி கூறிய நிலையில், தகுதியில்லாதவர்களே இன்று வரை அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே குறிப்பிட்ட துறைகளில் உள்ள தகுதியில்லாத மருத்துவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில், மயக்க மருத்துவ துறையில் உள்ள ஆறு மருத்துவர்களையும் சேர்த்து, அது தொடர்பாக சட்டப் போராட்டக் குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு 10609/21 ஐ முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.

அது போன்றே, தர்மபுரியில் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான துறையில் நான்கு இடங்கள் உள்ளன. இதில் ஒரு இடம் காலியாக உள்ளது. இருப்பவர்கள் 3 பேருமே அந்த துறைக்கான தகுதி பெற்றவர்கள் இல்லை.
அந்த ஒரு காலி இடத்திற்கு கூட அந்த மாவட்டத்தை சேர்ந்த நரம்பியல் அறுவைச் சிகிச்சை ( Neurosurgon) நிபுணர் டாக்டர் உதயபாரதி வர விரும்பினார்.

ஆனால் காலியாக உள்ள அந்த இடத்தைக் கூட அவருக்குத் தர மறுத்து, அவரை வேலூருக்கு அனுப்பி விட்டார்கள். இதனால் தர்மபுரிக்கு வரும் அத்தனை தலைக்காயம் மற்றும் விபத்து நோயாளிகளையும் சேலத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதில் நிறைய பேர் பாதி வழியிலேயே மரணித்து விடுகிறார்கள்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலத் துறையில் கவுன்சிலிங் ஏதுமின்றி தற்போது மருத்துவர் ஒருவர் திடீரென்று எப்படி நியமிக்கப்பட்டார்? இது தொடர்பாக விதி முறைகளை அப்பட்டமாக மீறி உத்தரவு போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

மேலும் முறைகேடாகப் பதவி உயர்வு பெற்ற மருத்துவர்களையும் விசாரணைக்கு உட்படுத்தி, விதி முறைகளை மீறி பதவி உயர்வு வழங்கப்பட்டது உண்மையெனில், அதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக இது தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும் அடுத்து அமையும் திமுகழக ஆட்சியில் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என 2019 ல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்த மருத்துவர்களின் போராட்டத்தின் போது நம் முதல்வர் உறுதியளித்தார்கள் இருப்பினும் இன்னமும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கலைஞரின் பெயரில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர், கலைஞரின் அரசாணை 354 ஐ உடனே நடைமுறைப்படுத்த, உத்தரவிட வேண்டுகிறோம்.

எனவே கலந்தாய்வில் நடந்த முறைகேடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு உடனடியாக நீதி வழங்கவும், அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்கிடவும், மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வருகின்ற செப்டம்பர் 28 ம் தேதி சென்னையில் ‘ குடும்பத்துடன் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்’ மேற்கொள்ள இருக்கிறோம். எனவே இந்த போராட்டத்துக்கு முன்னதாகவே அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, மருத்துவர்களை இன்னும் உற்சாகமாக பணி செய்ய வழிவகை செய்ய வேண்டுமென மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.

மரு பெருமாள் பிள்ளை தலைவர் அரசு மருத்துவர்களின் சட்டப் போராட்டக் குழு.

இதையும் படிங்க.!