17 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டையடுத்து சென்னை மற்றும் கரூரில் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல்வேறு கட்ட சோதனைகளை அமலாக்கத்துறை நடத்தியது.இந்நிலையில் ஜூன் 13ம் தேதி காலை 7 மணி அளவில் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.சுமார் 17 மணி நேர அமலாக்கத்துறை சோதனைக்குப்பின் இரவு 12.30 மணிக்கு மேல் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை முறைகேடு புகாரை விசாரிக்கும் அதிகாரி கார்த்திக் தேசாரி அமைச்சர் இல்லத்திற்கு வந்தார். அதன்பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் படுக்க வைத்து அழைத்து சென்றனர். விசாரணைக்கு செல்லும் வழியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறியதோடு கதறி அழுதார்.இதையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஓமந்தூரார் பன்னோக்கு மருத்தவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. அவருக்கு ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.