நீட் தேர்விற்கு மாவட்டங்கள் தோறும் இலவச பயிற்சி மையங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும். கிராமப்புற விவசாய குடும்பத்தின் மாணவர்கள் மருத்துவம் படிக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் முன்வரவேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை பெசன்ட் நகரில் 25 கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளான இன்று இயக்குனர் கௌதமன் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். அதனை தொடர்ந்து
பி.ஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடிமராமத்து திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட்டு விட்டது.இதனால் கிராமப்புறங்களில் மழை நீரை சேமித்து சாகுபடிக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தனக்கு சொந்தமான விளைநிலங்களில் இருந்து மண்ணை எடுத்து சமன்படுத்துவதற்கு ஏரி.குளம்.குட்டை உள்ளிட்டவற்றில் வண்டல் மண்ணை எடுத்து விளைநிலங்களை சமன்படுத்தி மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துவிட்டது.
குறிப்பாக தனக்கு சொந்தமான நிலங்களில் இருந்து மண்ணை எடுத்து பயன்படுத்த வேண்டுமானால் கூட டிராக்டர் ஒன்றுக்கு 500 ரூபாய் அரசுக்கு கப்பம் கட்ட வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக அமைந்தது.ஆனால் மூன்றாண்டு காலமாக தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை கைவிட்டு விட்டு மண்ணை விற்பனை செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது வேதனை அளிக்கிறது.
கிராமப்புறங்களில் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நகரப்புறங்களில் இருந்து மருத்துவர்கள் கிராமப்புறங்களுக்கு பணியாற்ற வருவதில்லை 70% பணியிடங்கள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது. குறிப்பாக மன்னார்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை அறிவிக்கப்பட்டு 13 ஆண்டு காலம் கடந்து விட்டது. இதுவரையிலும் முதுகலை மருத்துவர்கள் யாரும் அங்கு பணியில் இல்லை.சுமார் 70% காலி பணியிடமாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவர்கள் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முழுமையிலும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறையால் பல உயிர்கள் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
வேளாண் குடும்பங்களைச் சார்ந்த கிராமப்புற மாணவர்கள் நீட் கல்வி எட்டாக்கனியாக உள்ளது.இதனை எதிர்த்து போராடி வரும் நிலையில் ஆளுநர் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை அழைத்து கலந்துரையாடிய போது வெற்றி பெற்ற மாணவரின் தந்தையாரே நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்தார். அதற்கு பதில் அளிக்கிறேன் என்கிற பெயரில் நீட்ரத்து செய்வதற்கான சட்டத்தில் கையெழுத்திட மாட்டேன் என்று பேசி இருப்பது சட்டத்திற்கு புறம்பானது. குறிப்பாக நீட் மசோதா ஆளுநர் திருப்பி அனுப்பிய பிறகு சட்ட வழிமுறைப்படி குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்கு காத்திருக்கும் நிலையில்,ஆளுநர் பேசியிருப்பது குடியரசு தலைவரையே அவமதிக்கும் செயலாகும். உடனடியாக குடியரசு தலைவர் ஆளுநர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவரது பேச்சால் ஒரு மாணவனும். மாணவனுடைய தந்தையும் தற்கொலை செய்துகொள்ள துயரம் ஏற்பட்டுள்ளது தற்கொலைக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்.
கிராம புற மாணவர்கள் நீட் தேர்வு வெற்றி பெறும் வகையில் மாவட்டங்கள் தோறும் இலவச பயிற்சி முகாம்களை அரசே இலவசமாக நடத்த முன்வர வேண்டும். அவ்வாறு நடத்தப்படும் பயிற்சி முகாம்களில் தரமான பயிற்சி அளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாளைய தினம் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக கூட்டம் தொடங்கியவுடன் நீட் தேர்வு பாதிப்பால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஷ் அவரது தந்தையாருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுச் செயலாளர் வி கே வி துரைசாமி. தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தலைவர் எல்.பழனியப்பன். வைகை முல்லை பெரியாறு வைகை பாசன கூட்டமைப்பு தலைவர் எல்.ஆதி மூலம். மாநில கௌரவத் தலைவர் எம் பி ராமன், சென்னை மண்டல தலைவர் சைதை சிவா.மதுரை மண்டல செயலாளர் உறங்காபுலி’ செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டில்லி ராம். மாவட்டதுணை சக்திவேல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.