chennireporters.com

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததுடன், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரின்.

அடிப்படையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதில் தலைமறைவான மணிகண்டனை அடையாறு அனைத்து மகளிர் போலீசார், ஜூன் 20ம் தேதி பெங்களூருவில் வைத்து கைது செய்தனர்.

சைதாப்பேட்டை கிளைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டன் சார்பில் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை நீதிபதி நிர்மல்குமார் விசாரித்தார் அப்போது மணிகண்டன் சார்பில் வாதிடுகையில், மனுதாரருக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளது தெரிந்தே, ஐந்து ஆண்டுகள் அவருடன் புகார்தாரர் கணவன் – மனைவியாக வசித்துள்ளார்.

அதனால் பாலியல் வன்கொடுமை என்ற கேள்விக்கு இடமில்லை கருக்கலைப்புக்கு புகார்தாரரே ஒப்புதல் அளித்துள்ளார் என வாதிடப்பட்டது.

நடிகை சாந்தினி தரப்பில், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறியதால்தான், அவருடன் கணவன் – மனைவியாக வாழத் துவங்கினேன்.

இப்போது ஏமாற்றியதுடன், மிரட்டல் விடுத்த மணிகண்டனுக்கு ஜாமின் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், மனுதாரர் முன்னாள் அமைச்சர். செல்வாக்கான நபர். ஆதலால், சாட்சிகளை கலைக்ககூடும். எனவே அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், மனுதாரர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி,மனுதாரர் இரண்டு வாரங்களுக்கு காவல்துறை முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் அதன்பிறகு விசாரணைக்கு தேவைப்படும்போது, போலீசார் முன்பு ஆஜராக வேண்டும்.

மனுதாரர் தனது கடவுச்சீட்டை ( பாஸ்போர்ட்) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!