chennireporters.com

டில்லியில் நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபிர் கைது சி.எம்.பி.சி கண்டனம்.

நியூஸ்கிளிக் டிஜிட்டல் ஊடகத்தின் நிறுவனர் தீவிரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவாலை எதிர்கொள்ள அனைவரும் ஒருங்கிணைவோம் என்று அழைப்பு விடுக்கிறது.

சுதந்திர ஊடகமான நியூஸ்கிளிக் நிறுவனத்தின் டெல்லி தலைமையகத்தில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவினர் நேற்று (03.10.23) சோதனை நடத்தினர். அத்துடன், நியூஸ்கிளிக் ஊடகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அந்த ஊடகத்தில் கட்டுரைகள் எழுதிய மூத்த பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், வரலாற்று ஆய்வாளர், விஞ்ஞானி மற்றும் நகைச்சுவைக் கலைஞர் என பல்வேறு நபர்களின் வீடுகளிலும் டெல்லி காவல்துறை சோதனை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து நியூஸ் கிளிக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். அந்த நிறுவனத்தின் நிறுவனர் பிரபிர் புர்கியாஸ்தா, மனிதவளத்துறை தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி, அமெரிக்காவின், தி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் வெளியிட்ட ஒரு புலனாய்வுக் கட்டுரையில், அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரரான நெவில் ராய் சின்ஹம், நியூஸ்கிளிக் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகவும், அவருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பரப்புரை பிரிவிற்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, சீனாவிடம் பணம் பெற்றுக்கொண்டு நியூஸ்கிளிக் நிறுவனம் இந்தியாவுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருவதாக எந்தவித அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை தி நியூயார்க் டைம்ஸ் வைத்துள்ளது.

                                                                         நெவில் ராய் சின்ஹம்

அதன்பிறகு, ஆகஸ்ட் 7 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, இந்த ஆதாரமற்ற செய்தியை, எந்தவித முன் அறிவிப்புமின்றி அவையின் விதிகளை மீறி சுட்டிக்காட்டி பேசினார். அப்போது, நியூஸ்கிளிக் நிறுவனம் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் சீனாவிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். அவரைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் இதே குற்றச்சாட்டை எவ்வித ஆதாரமும் இன்றி முன்வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 17ஆம் தேதி டெல்லி காவல்துறை, தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் பதிவு செய்த வழக்கின் அடிப்படையிலேயே நியூஸ் கிளிக் நிறுவனத்தில் சோதனை நடைபெற்றது தெரியவந்துள்ளது. இந்த சோதனையின் போது நியூஸ்கிளிக் நிறுவனத்தில் பணியாற்றும் பல பத்திரிகையாளர்களின் மடிக்கணினி மற்றும் செல்போன்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. இந்த தகவலை காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது எக்ஸ் பக்கத்தில், நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல், எதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் சொல்லாமல், பத்திரிகையாளர்களின் மடிக்கணினி மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்று கண்டித்துள்ளார்.பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட செயல்பாட்டாளர் ரோனா வில்சன், வழக்கறிஞர் சுரேந்திர கட்லிங் ஆகியோரின் கம்ப்யூட்டர்களில், மால்வேர் எனப்படும் மென்பொருள் மூலம் அவர்களுக்கே தெரியாமல் சில ஆவணங்களை, வெளியிலிருந்து யாரோ சிலர் வைத்துள்ளதை, அமெரிக்காவை சேர்ந்த அர்சனல் கன்சல்டிங் என்ற நிறுவனம் கண்டுபிடித்தது. அவர்கள் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆகவே, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குறிப்பிட்டுள்ளது போல், சட்டத்திற்குப் புறம்பாக பத்திரிகையளார்களின் மடிக்கணினி மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் மடிக்கணிணி மற்றும் செல்போன்களில் சில விரும்பத்தகாத ஆவணங்கள் வைக்கப்படுவதற்கும், அதன் அடிப்படையில் அந்த பத்திரிகையாளர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை உறுதி செய்வதற்கு காவல்துறை முயல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன.ஒரு ஊடகத்தில் வெளியான செய்தியை ஆதாரமாக வைத்துக்கொண்டு, ஒரு ஊடக நிறுவனத்திற்கு சீல் வைத்து அதன் செயல்பாட்டையே முடக்கியிருப்பதும், அந்த நிறுவனத்தின் ஆசிரியரை கைது செய்திருப்பதும், அத்துடன் அவர் மீது தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதும் ஒரு ஜனநாயக நாட்டில் கற்பனையும் செய்து பார்க்க முடியாது நிகழ்வாகும். ஆனால், இன்று அத்தகைய செயலை மிகவும் சாதாரணமாக ஒன்றிய அரசு நிகழ்த்தி காட்டியுள்ளது.

பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் நேரடியாக விடப்பட்ட சவால் என்றே மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் சங்கம் கருதுகிறது.ஆகவே, அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையைப் போன்ற இத்தகைய சூழ்நிலையில், பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க ஒருங்கிணைய வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமை என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கருதுகிறது.

நியூஸ்கிளிக் நிறுவனத்தை முடக்கியதற்கும், அதன் ஆசிரியர் மற்றும் மனிதவளத்துறை தலைவர் கைது செய்யப்பட்டதற்கும், பத்திரிகையாளர்களின் மடிக்கணினி மற்றும் செல்போன்கள், சட்டத்திற்குப் புறம்பாக பறிமுதல் செய்யப்பட்டதற்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய கேடு ஏற்பட்டுள்ள இந்த நிலையில், இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமையை பாதுகாக்க, நீதித்துறை உடனே தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர்களை விடுதலை செய்யவும், முடக்கப்பட்டுள்ள பத்திரிகை நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக்கொள்ளும் நாம், அந்த ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய கேடு ஏற்பட்டுள்ள இந்த நிலையில், அனைவரும் ஒருங்கிணைந்து அதை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அழைப்பு விடுக்கிறது.

இதையும் படிங்க.!